பக்ரீத்: எல்லையில் இனிப்பு இல்லை

அட்டாரி: எல்லையில் பக்ரீத் திருநாள் முன்னிட்டு இந்திய வீரர்களிடம் இருந்து இனிப்புகளை பெற பாக்., வீரர்கள் மறுத்து விட்டனர். அவர்களும் நமது வீரர்களுக்கு இனிப்புகளை தரவில்லை.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், இரண்டாக பிரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதற்கு காஷ்மீர் மக்கள் கூட பெரும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்; மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று ஈகைத் திருநாளாம் பக்ரீத் கொண்டாடப்பட்டது. காஷ்மீரிலும் மிக அமைதியான முறையில் தொழுகை முடிந்து இயல்பு நிலை காணப்படுகிறது.இந்நிலையில் இந்தியா- பாக்., எல்லையான அட்டாரி -வாகா பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் பக்ரீத்தை கொண்டாடவில்லை. குறிப்பாக இந்திய வீரர்களுக்கு எப்போதும் வழங்க கூடிய இனிப்பு பரிமாற்றத்தையும் நிறுத்தி கொண்டனர். நமது வீரர்கள் தந்த இனிப்புகளையும் பெற்றுக்கொள்ளவில்லை. வாழ்த்தையும் ஏற்கவில்லை. இதனை உயர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இது ஏற்கனவே நடந்தது

தீபாவளி, சுதந்திரதினம், குடியரசு தினம், ரமலான், போன்ற முக்கிய நாட்களில் இரு நாட்டு எல்லை வீரர்களும் வாழ்த்து தெரிவிப்பதும், இனிப்பு வழங்குவதும் பாரம்பரியமாக இருந்து வரும் விஷயம் கடந்த குடியரசு தின விழாவில் தொடர் தாக்குதல் காரணமாக இரு தரப்பினரும் இனிப்பு பரிமாறி கொள்ளவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்த போதும் கடந்த 2016 ல் தீபாவளியிலும் இனிப்பு பரிமாறி கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் வரும் ஆக.14 மற்றும் ஆக.15 சுதந்திர தினங்களிலும் இது தொடருமா என்பதை சொல்ல முடியவில்லை.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்