மாணவியை மிரட்டிய இளைஞன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது…!

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதால், 10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொடுமுடி அடுத்த தேவம்பாளையத்தை சேர்ந்த 22 வயதான நந்தகுமார் என்ற இளைஞன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறான். இவன் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியிடம் சில மாதங்களாக பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மாணவியை ஆசைக்கு இணங்கும் படி நந்தகுமார் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் தன்னிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்ததால் வெறுப்பான நந்தகுமார், மாணவியிடம் சரியாக பேச மறுப்பது குறித்து கேட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட நந்தகுமார், இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் இருப்பதாகவும், தன்னிடம் பேச மறுத்தால் அதனை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளான்.

இதனால் செய்வதறியாது மிகுந்த குழப்பத்தில் இருந்த அந்த மாணவி, நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொள்வது என்ற தவறான முடிவை எடுத்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

பின்னர் மீட்கப்பட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து நந்தகுமார் மீது மாணவியின் தந்தை கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் மாணவி உயிரிழப்புக்கு காரணமான நந்தகுமாரை கைது செய்தனர்.

அவன் மீது போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல், மிரட்டல் விடுத்தல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்