வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நோக்கி ஆப்கானிஸ்தான்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

சட்டோகிராம்,

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன்களும், வங்காளதேசம் 205 ரன்களும் எடுத்தன. 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசத்துக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி வங்காளதேச அணி 2-வது இன்னிங்சை ஆடிய போது மூன்று முறை மழை குறுக்கிட்டது. அந்த அணி 44.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்த போது, மழை பெய்ததால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் ஷகிப் அல்-ஹசனும் (39 ரன்), சவும்யா சர்காரும் (0) களத்தில் உள்ளனர். சுழற்பந்துவீச்சாளர்கள் ரஷித்கான் 3 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே வைத்துள்ள வங்காளதேச அணிக்கு இன்னும் 262 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த டெஸ்டில் ஆப்கானிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்