கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் அதிகாலையில் தீவிபத்து

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

கொச்சி,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். ஸ்ரீசாந்த், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றபோது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம், அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆயுட்கால தடை விதித்தது. சமீபத்தில்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தடையை 7 ஆண்டுகளாக குறைத்தது.

கேரள மாநிலம் கொச்சியில் ஸ்ரீசாந்த்தின் வீடு உள்ளது. இங்கு அவரும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்த் வீட்டின் முன்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் சிறிது நேரத்தில் வீட்டின் முன்பக்க அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

ஸ்ரீசாந்த் வீட்டில் தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். திருக்காக்கரா மற்றும் காந்திநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள், ஸ்ரீசாந்த் வீட்டில் இருந்து தீயை அணைத்தனர். என்றாலும் வீட்டின் முன்பக்க அறை எரிந்து நாசமானது. தீ விபத்து நடந்தபோது வீட்டில் ஸ்ரீசாந்த்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதற்கிடையே தீ விபத்திற்கான காரணம் குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீசாந்த் வருகிற 2020-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டில் தீ விபத்து நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்