நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-விற்கு கொங்கு மண்டலத்தில் மரண அடி விழும் : டிடிவி பேச்சு…!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக, கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தினகரன், கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். பல இடங்களில் திறந்த வேனில் நின்றபடியே பேசும் தினகரன் செல்லும் இடமெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் இன்றைய பிரசாரத்தின் போது பேசிய டிடிவி தினகரன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் தான். ஆனால் தன் சொந்த மக்களுக்கே முதல்வர் கேடு நினைத்து செயல்பட்டு வருகிறார். எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கம்பெனியால்தான் இந்த நிலைமை. கொங்கு மண்டல மக்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையில் இருக்கும், பாஜகவின் அடிமையாய் மாறிப்போன அதிமுகவுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுக்க காத்திருக்கிறார்கள். மேலும் ஆவேசமாக பேசிய அவர் தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி என்ற கம்பெனி தானாக கலையும் என்றார் .

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்