பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு: பக்தர்கள் திரும்புவதில் தாமதம்

பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சந்நிதியில் இருந்து திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டது.
சபரிமலையில் புதன்கிழமை நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதில் கேரள மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே கேரளத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதனால், வியாழக்கிழமை அதிகாலை முதல் பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நிறை புத்தரிசி பூஜை முடிந்து புதன்கிழமை இரவு சபரிமலை சன்னிதானத்தில் தங்கிய பக்தர்கள் வியாழக்கிழமை அதிகாலை கோயிலில் இருந்து புறப்பட்டனர்.
கொட்டும் மழையில் மலையிலிருந்து பம்பை நோக்கி இறங்கி வந்தனர். அப்போது பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நடைபாதைகள் மூழ்கியிருந்தன. இதனால் பக்தர்கள் ஆற்றை கடந்து மறுகரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் நடை பாலத்திலும் வெள்ள நீர் புகுந்ததால் ஆற்றை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே மழை வெள்ளம் சிறிது குறைந்த நிலையில் கன்னிமூல கணபதி சந்நிதி பகுதியில் காத்திருந்த பக்தர்கள் அவசரஅவசரமாக மறுகரைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பம்பையில் இருந்து தமிழகம் நோக்கி புறப்பட்ட பக்தர்களின் வாகனங்கள், வழி நெடுகிலும் பாறைகள் உருண்டு விழுந்ததாலும் மரம் முறிந்து விழுந்ததாலும் தடை ஏற்பட்டது. முண்ட காயம் முதல் குமரி வரையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. வண்டிப் பெரியாரில் இருந்து குமுளி வழியாக கம்பம் வரும் வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு பாதைதயில் திருப்பி விடப்பட்டன.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்