நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

 

விநாயகர் சதுர்த்தி இன்று செப்டம்பர் 2 (திங்கள்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மக்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி பொதுமக்கள் நேற்று மாலை முதலே கடைகளுக்கு சென்று சென்னையின் முக்கிய பகுதிகளான தியாகராய நகர், கோயம்பேடு காய்கறி சந்தை, புரசைவாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000 க்கும் மேற்பட்ட சிறு, குறு வியாபாரிகள் திறந்து வைத்துள்ள கடைகளில் விநாயகர் சிலை, பூஜை பொருள்கள், பழவகைகள், அவல்பொரி உள்ளிட்ட பொருள்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு இன்று அலங்காரம் செய்து கொழுக்கட்டை, அவல், பொரி முதல் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மும்பையில் பிரபலமான லால்பவுச்சா ராஜா விநாயகர் சிலை அமைக்கப்பட்டு  பொதுமக்கள் வழிபாடுசெய்து வருகின்றனர். மேலும் பிள்ளையார்பட்டி கோயிலிலும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ பிரமாண்ட கொழுக்கட்டை படையல் செய்தும் வழிபாடு செய்து வருகின்றனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்