பாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்தா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? யோகி அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

பாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்தா மீது யோகி ஆதித்யநாத் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச அரசுக்கு பெண்களின் பாதுகாப்பு மீது துளியும் அக்கறை இல்லை என்று உ.பி. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் டுவிட்டரில் தனது கருத்தினை வெளிப்படுத்திய பிரியங்கா காந்தி,

உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு அதன் செயல்பாடுகள் மூலம் பெண்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இரண்டாவது முறையாக ஊடகங்களின் வாயிலாக தனக்கு நியாயம் கோருகிறார். உத்தர பிரதேச போலீசார் ஏன் இவ்வளவு மெத்தனமாகச் செயல்படுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவுக்கு நெருக்கமானவர் என்பதால் இவ்வாறு செய்கின்றனரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர், பாஜக முன்னாள் மந்திரியும் மூத்த தலைவருமான சின்மயானந்தா மீது பாலியல் பலாத்காரப் புகார் கூறியிருந்தார்.

அவரது குற்றச்சாட்டு வாட்ஸ்அப்பில் வைரலான அன்றைய தினமே அவர் காணாமல் போனார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அவர் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனை சுட்டிக்காட்டியே பிரியங்கா காந்தி இந்த டுவிட்டை பதிவு செய்து உள்ளார்.

ஏற்கனவே உன்னாவோ இளம்பெண், பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது அளித்த பலாத்காரப் புகாரின் பேரில் தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாஜக முக்கிய பிரமுகரும் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்