‘காரில் பறந்து வந்து விழுந்த கண்ணீர் கடிதம்’ – நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை

காரில் சென்று கொண்டிருந்த நிர்மலா சீதாராமனை நோக்கி பெண் ஒருவர் துண்டு பேப்பரை சுருட்டி வீசி கோரிக்கை விடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், தென் கர்நாடகத்தில் உள் மாவட்டங்களான சிவமொக்கா, கார்வார், மங்களூரு, உடுப்பி, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தின் பெரும்பாலான இடங்கள் தற்போது வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. மக்கள் பலரும் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது காரில் சென்று கொண்டிருந்த நிர்மலா சீதாராமனை நோக்கி பெண் ஒருவர் துண்டு பேப்பரை சுருட்டி வீசியுள்ளார். இதனை கவனித்த நிர்மலா, காரை உடனடியாக நிறுத்தியுள்ளார். அந்தத் துண்டு காகித்தத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு வீடு கட்டித்தர வேண்டுமென்று எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது

அந்தப்பெண்ணை அருகில் அழைத்த நிர்மலா, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் குறித்து அவரிடம் விளக்கம் அளித்தார். அந்தப்பெண்ணிடம் பேசிய அமைச்சர் நிர்மலா,வீட்டுக்காக நீங்கள் அழக்கூடாது. உங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அருகில் நின்ற அதிகாரியிடம் அந்தப்பெண்ணுக்கு வீடு வழங்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் அந்தப் பெண்ணின் பெயரை சேர்த்துக்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்