குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசினார் மோடி

குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.

மதுரா,

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரதமர் இன்று ஒரு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த விழாவில் கலந்துக் கொள்ள மதுராவிற்கு மோடி வருகை தந்தார். அவரை உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொடுத்து வரவேற்றார்.

பின்னர் அப்பகுதியில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த இடத்தில், மோடி குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.

பின்னர் அவர் பேசும்போது,

அக்டோபர் 2, 2019-க்குள் நமது வீடுகள், அலுவலகங்களில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் பயன்பாடுகளை அகற்றுவதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். இந்த பணியில் சேர சுய உதவிக்குழுக்கள், சிவில் சமூகம், தனிநபர்கள் மற்றும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது. உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தை தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மதுரா எம்.பி. ஹேமமாலினி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக கால்நடைகள் கால் மற்றும் வாய் நோய் (எஃப்எம்டி) மற்றும் புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை (என்ஏடிசிபி) இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விழா நடைபெறும் இடத்தில் கால்நடை மருத்துவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

அத்துடன் கால்நடை, சுற்றுலா மற்றும் சாலை கட்டுமானம் தொடர்பான உத்தரபிரதேச அரசின் 16 திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்