திருமணத்திற்கு வற்புறுத்திய குடும்பத்தினரை கூண்டோடு சுட்டு வீழ்த்திய வாலிபர்!

பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் நத்வாலா என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்ஜித் சிங்(55) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு குர்சரண் சிங் என்ற தந்தையும், குர்தீப் கவ்ர்(70) தாய், பின்டர் கவ்ர்(50) என்ற மனைவியும், அமந்ஜோத் கவ்ர்(33) என்ற மகளும், சந்திப் சிங்(28) என்ற மகனும் உள்ளனர். அமந்ஜோத் கவ்ர்க்கு திருமணமாகி இரண்டரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இதற்கிடையில், மஞ்ஜித் சிங் தன் மகனுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.ஆனால் திருமணம் செய்து கொண்டால் தந்தையின் சொத்துக்களை ஒருவேளை அடைய முடியாமல் போய்விடும் என சந்திப் எண்ணினார். மேலும், அவருக்கு உடல் ரீதியிலான பிரச்சனைகளும் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் திருமணத்தை நிறுத்தும் படியும் குடும்பத்தினரிடம் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்த போது மீண்டும் திருமணம் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது, சந்திப் சிங்கிற்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சந்திப் தான் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தனது குடும்பத்தினர் மீதும் சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சந்திப்பின் தந்தை மஞ்ஜித், தாய் பின்டர் கவ்ர், பாட்டி குர்தீப் கவ்ர், அக்கா அமந்ஜோத் கவ்ர் மற்றும் அவரது குழந்தை ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, சந்திப்பும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாத்தா குர்சரன் மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்