தமிழர்களை ஏமாற்ற முனைகிறார் மஹிந்த!

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் செயற்பாட்டை பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பே கடுமையாக எதிர்த்து வருகையில் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்குவேன் என மஹிந்த கூறுவதன் நோக்கம், தேர்தலை இலக்கு வைத்து மீண்டும் தமிழர்களை ஏமாற்றுவதற்கே ஆகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரம் உட்பட ஒட்டுமொத்த அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, 13இற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவேன் எனக் கூறவதை நம்புவதற்கு தமிழர்கள் தயாராகவில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். இதன்போது, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரப்பகிர்வை வழங்கத், தாம் சிந்திப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஒத்துழைப்பை வழங்காமையாலே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது போனதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிடுகையில்,

“இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக இரண்டு வருடத்திற்கு அதிகமாக எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏமாற்றியிருந்தார். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாகவும் கூறிய அவர், 18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்கள் உட்பட ஒட்டு மொத்த அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது. எம்மை மஹிந்த ராஜபக்ஷ ஏமாற்றியிருந்தார் என்பதே உண்மை. தற்போதுகூட புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளை பாராளுமன்றில் அவரின் தரப்பே கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சித் தலைவரின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாரில்லை என்றார்.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து வெளியிடுகையில்,

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுடன் 18 முறை போச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். நாங்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தயாராகவிருக்கவில்லை.

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது. இவர்கள் முன்மொழிந்த கோரிக்கைகளைக் கூட நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ தயாராகவிருக்கவில்லை என்று கூறினார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்