4 காவலர்கள் பணியிடை நீக்கம்!

பீகார் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் பிரபல கிரிமினல் கைதியின் பிறந்தநாளை பலூன் கட்டி, கேக் வெட்டி, கறி விருந்துடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தின் சிதாமார்ஹி மாவட்டத்தை சேர்ந்தவர் பின்ட்டு திவாரி. கடந்த 2015-ம் ஆண்டில் இங்குள்ள தர்பங்கா பகுதியில் இரு என் ஜினீயர்களை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்ட்டு திவாரி சிதாமார்ஹி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பின்ட்டு திவாரி சிறைக்குள் தனது 30-வது பிறந்தநாளை பலூன் கட்டி, கேக் வெட்டி கறி விருந்துடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

புத்தம் புது கருப்பு நிற பேண்ட், டி-ஷர்ட் அணிந்திருக்கும் அந்த தண்டனை கைதி, பலூன்கள் கட்டப்பட்டுள்ள மரத்தின் நிழலில் சககைதிகளின் ‘ஹேப்பி பர்த்டே’ கோரஸ் பாட்டுடன் பிறந்த நாள் கேக் வெட்டி பரிமாறும் காட்சியும், அவருக்கு மற்ற கைதிகள் பரிசு அளிப்பதும், ஆட்டுக்கறிச் சோறுடன் சிறைக்குள் தடபுடலான விருந்து அளிக்கப்பட சம்பவமும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி, தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விருந்தின்போது ஒரு கைதி கைபேசியில் யாருடனோ சுவாரஸ்யமாக பேசும் காட்சியும் பதிவாகியுள்ளது. சிறை விதிகளை மீறிய வகையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ வெளியானதும் 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிதாமார்ஹி சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்