‘உலகம் சுற்றும் வாலிபன்’ தலைப்பை தனுஷ் படத்துக்கு பயன்படுத்த எதிர்ப்பு

அசுரன் படத்தை முடித்து விட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் தனுஷ். இதில் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பை லண்டனில் நடத்துகின்றனர். இந்த படத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன.

எம்.ஜி.ஆர், லதா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973-ல் வெளியானது. எம்.ஜி.ஆர் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த தலைப்பை பெறும் முயற்சியில் தனுஷ் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், நம்நாடு என்ற பெயர்களில் படங்கள் வந்துள்ளன.

தற்போது ‘எங்க வீட்டு பிள்ளை’ தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று மாற்றி விட்டனர். உலகம் சுற்றும் வாலிபன் தலைப்பை பயன்படுத்தவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சாய் நாகராஜன் கூறும்போது, “எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வருகிறோம். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் உரிமை என்னிடம் இருக்கிறது. எனவே தலைப்பை யாருக்கும் கொடுக்க மாட்டோம்” என்றார். எனவே இந்த தலைப்பு தனுஷ் படத்துக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்